பக்கங்கள்

22 அக்., 2013

அவன் வழி.... தனி வழி....

பிரசித்தி பெற்ற ஒரு கோயில். அதன் பிரதான தெய்வத்தைத் தரிசனம் செய்ய ஒவ்வொரு நாளும் வரும் கூட்டம் அப்பப்பா! அலை மோதும். அந்தக் கோயிலில் ஸ்வீப்பராக வேலை செய்யும் குப்பனுக்கு சாமியைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.
"இந்தச் சாமிக்கு ஒரு நாளைக்குக் கூட ரெஸ்டே இல்லையே? வருஷம் பூரா மணிக்கணக்கா
நின்னுக்கிட்டே வர்ற எல்லாத்துக்கும் தரிசனம் குடுத்துக்கிட்டே இருக்காரே" ஒவ்வொரு நாளும் இந்தக் கேள்வியைத் தவறாது அவனது சாமியிடமும் கேட்பது அவரை வாடிக்கையாகப் போனது அவளது ஆதங்கத்தைக் கண்டு வியந்த ஆண்டவன் ஒரு நாள் அவன் கனவில் வந்தார்.
"ஒவ்வொருவரும் அவரது தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி, அந்த விதி எனக்குந்தானே பொருந்தும்? ஏன் என் மீது வருத்தப்பட்டு வீணாக உன் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?" "பக்தனிடம் இரக்கங் கொண்ட சாமி கேட்டார்.
"எல்லாம் சரி சாமி,. எவ்வளவு நாள் தான் இப்படியே நின்னுக்கிட்டே இருப்பே? ஒரு நாளைக்காவது ரெஸ்ட் எடுத்துக்க" கரிசனத்துடன் சொன்னான் குப்பன்.
"அந்த ஒரு நாளைக்கு என்னோட வேலைய யார் பாத்துப்பா?"
"ஏன் நான் பாத்துக்கறேன். வேண்டாமுன்னா சொல்லிடுவே நீ?" வெகுளித்தனமா பதில் வந்தது.
"நீயா? என்னோட தொழிலையா? அதெப்படி?" இழுத்தார் கடவுள்.
"எல்லாம் முடியும். என்னென்ன செய்யணும்னு ஒரு லிஸ்ட் போட்டுக் குடுத்துடு. அதுபடி செய்யறேன். இப்ப இந்தக் கோயிலை நான் நீட்டா வெச்சுக்கலையா?" தெளிவுடன் கேட்டான்.
"என்னென்ன செய்யணும்னு சொல்றதைவிட எது எது செய்யக் கூடாதுன்னு நீ தெரிஞ்சுக்கணும்" கடவுள் பீடிகை போட ஆரம்பித்தார்.
"அப்ப நான் ஒன்ன மாதிரி `ஆக்ட்` பண்றதுக்கு நீ ஓகேன்னு சொல்லிட்டேன்னு சொல்லு" உற்சாகத்தில் துள்ளினான் அவன்.
"ஒரு நாள் சாமிக்கே இவ்வளவு துள்ள ஆரம்பிச்சிட்டியா? இதோ பாரு நீ பேசாம இருக்கணும். வர்றவங்க எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் என்ன சொன்னாலும் சிலையா நிக்கணும்"
"ஒன்ன மாதிரி"
"ஆமாம் அதே தான். முக்கியமா உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது உளறி காரியத்தையே கெடுக்கக் கூடாது" ஒரு நாள் சாமிக்கு ஒரு நாள் குறித்து உண்மையான சாமி ஒதுங்கினார்.
ஸ்வீப்பர் சிலையாக நின்றான். தரிசனக் கூட்டம் வர ஆரம்பித்தது. முதலில் ஒரு பணக்காரன் வந்தான்.
"ஆண்டவா! எனக்கு நெறைய வருமானத்தை நீ குடுத்துட்டு வர்ரே அதுல ஒரு பங்க ஒன்னோட உண்டியல்ல காணிக்கையா ரெகுலரா போட்டுட்டு வர்ரேன். நீ நெறையத் தரணும். எங்கட்டேருந்தும் வாங்கிக்கணும்" தரிசனம் முடிந்து வெளியேறியவன், தான் கொண்டு வந்த பணப்பையை ஆண்டவன் சிலைக்கு முன் வைத்து விட்டுச் சென்று விடுகிறான்.
"ஒரு நாள் சாமி" வாயைத் திறக்க வந்தான். எச்சரிக்கை நினைவுக்கு வரவே வாய் மூடப்பட்டு விட்டது.
அடுத்ததாக ஒரு ஏழை வந்தான். "இறைவா! உன்னோட அருளால நிறைய பேருக்கு சரீரத்தால சேவை செய்யறேன். என்னால முடிஞ்சது ஒரு ரூபாய்க் காசு அவ்வளவு தான். அதைத் தான் உண்டியல்ல போட முடியும். மன்னிச்சுக்கோ. அடுத்ததா ஒரு விண்ணப்பம். ஒனக்கே தெரியும் ஒரு நா கூட எனக்கு இது வேணும் அது வேணும்னு ஒங்கிட்ட நா கேட்டதில்லே. இப்ப வாய் திறந்து கேக்கறேன். பிளஸ் டூவில் என் பையன் நல்ல மார்க் வாங்கியிருக்கான். மேல படிக்கணும்னு ஆசை. ஆனா என்ன மாதிரி ஏழைக்கெல்லாம் ஆசை மட்டும் இருந்தா போதுமா? அதுக்கேத்த வசதி வேணாமா? நீ நெனச்சா அதுக்கு ஏதாவது செய்ய முடியும் பாத்துச் செய்" வெளியேற எத்தனித்தவன் கண்ணில் பணக்காரன் விட்டுச் சென்ற பணப்பை பட்டது.
"ஆகா! உனது கருணையே கருணை! ஆபத்பாந்தவா!" பணப்பை அவன் கைக்கு மாறியது.
'ஒரு நாள் சாமி', "ஐயோ! இது ஒன்னோடது இல்ல" என்று சொல்ல வாயெடுத்தார். அடக்கிக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து ஒரு கப்பல் கேப்டன் வந்தார்.
"ஆண்டவா! நாலு மாசத்துக்கு அப்புறம் லீவு முடிஞ்சு நாளைக்கு ஷிப் டூட்டிக்கு போறேன். எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காம ஒழுங்கா முறையா நல்லபடியா வீட்டிற்கு வரணும்" வேண்டிக் கொண்டிருந்தவரை ஒரு போலீஸ்காரர் கை பதம் பார்த்தது. கேப்டன் கையில் பணக்காரர் தொலைத்த அதே மாதிரியான பை இருந்தது.
"இதோ, இவன் தான் என்னோட பணப்பை இது தான்... அரெஸ்ட் பண்ணுங்க சார் இவனை" பணத்தைத் தொலைத்த பணக்காரன் போலீஸுடன் வந்து கூப்பாடு போட்டான்.
கேப்டன் செய்வதறியாது நின்றார். போலீஸ் அவரை அரெஸ்ட் செய்து கொண்டு போகும் நேரம்.
ஒரு நாள் சாமி`க்கு இதற்கு மேலும் பொறுமையில்லை. வாயைப் பொத்திக் கொண்டு நடந்த அட்டூழியத்தை எல்லாம் சிலை போல் பார்க்க இயலவில்லை.
"பாவம், இவர் எதையும் எடுக்கவில்லை. எடுத்த ஆள் அதோ அந்த பாவப்பட்ட மனுஷன் அவன் தான். அவனைப் பிடியுங்க. இந்த கேப்டன் நிரபராதி" தெய்வமே வாய் திறந்து சொன்னதில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
ஆண்டவனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கேப்டன் சென்றார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக ஏழை கைதியாகச் சென்றான்.
தனது ஒரு நாள் கடமையைச் செய்து முடித்து விட்ட திருப்தியில் தூங்கிய `ஒரு நாள் சாமி`யின் கனவில் ஒரிஜினல் சாமி வந்தார்.
"என்னப்பா, ஒரு நாள் அனுபவம் எப்படி?" ஆரம்பித்தார் ஆண்டவன்.
"அப்பப்பா எத்தனை பேரு? எவ்வளவு பிரச்னை? ஒரு நாளைக்கு கேக்கறதுக்கே எனக்கு இவ்வளவு கஷ்டம்னா வருஷம் முந்நூற்று அறுபத்தஞ்சு நாளும் சலிக்காம கேக்கறதுக்கு ஒனக்கு எவ்வளவு கஷ்டம்னு எனக்கு இப்பத்தான் புரியுது" `ஒரு நாள் சாமி` ஆதங்கப்பட்டான்.
"ஓஹோ? எனக்கா? கஷ்டமா?" சிரித்துக் கொண்டே கடவுள் தொடர்ந்தார். "எனது கடமையைச் செய்ய நானே சலித்துக் கொண்டால் என்ன ஆகறது? அது சரி இன்றைக்கு ஏதாவது விசேஷம் உண்டா?" சிரித்தபடியே கேட்டார்.
நடந்ததை நடந்தவாறே சொன்னான் `ஒரு நாள் சாமி`
"ஐயையோ! காரியத்தையே கெடுத்துப்புட்டியே?"
"என்ன ஆச்சு? நான் தப்பு பண்ணிட்டேனா?"
"தப்பா? பெரிய இமாலயத் தவறை இல்ல நீ பண்ணிருக்கே?"
"அப்படீன்னா? வௌங்கற மாதிரி சொல்லு சாமி" `ஒரு நாள் சாமி` ஆடிப்போய்த் தான் கேட்டான்.
"நல்லா கேட்டுக்க, மொதல்ல வந்த பணக்காரன் தீய வழியில பணத்தைச் சேக்கற ஒரு ஏமாத்துப் பேர்வழி. முந்தைய ஜென்மத்துல பூரா சேத்து வெச்ச புண்ணிய மூட்டைய எல்லாம் மொத்தமா கரைச்சிட்டு இருக்கான்." இவ்வளவு அநியாயம் பண்றான். அவன் எப்படி கொழிக்கறான். தெய்வமே! நீ கேக்க மாட்டியான்னு நீங்க நெறைய பேர் எங்கிட்ட முறையிடறது இல்லையா? அவன் வசதியா வாழறதுக்குக் காரணம் இப்ப புரிஞ்சுதா? இந்தப் புண்ணிய மூட்டையைக் கூடிய சீக்கிரம் காலி பண்ணிட்டு இந்த ஜென்மத்துலயே அதோட பலனை அனுபவிக்கப் போறான். அத ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா அவன் பண்ற பாவத்தைக் கொஞ்சம் கரைக்கலாம்னு தான் அவனோட பணப்பைய தொலைக்க வெச்சேன். அந்த பணம் ஒரு பையனோட படிப்புச் செலவுக்கு ஆகட்டுமே, அந்தப் புண்ணியம் இந்தப் பணக்காரனுக்குப் போகட்டுமேன்னு ஏற்பாடு பண்ணி வெச்சிருந்தேன். அதை நீ கெடுத்துட்டே. அந்த ஏழை பாவம் அவனோட பையன் படிப்புக்கு பணம் கெடைச்சுதுன்னு சந்தோஷப்பட்டான். அதையும் பாழ்படுத்திட்டே" இறைவன் அடுக்கிக் கொண்டே போனார்.
"மூணாவதா வந்த கேப்டன்- அவன் ஏன் அரெஸ்ட் ஆவணும்? அவனுக்கு ஏன் திருட்டுப் பட்டம்?"
"ஒனக்கு அது புரியாதுப்பா. அந்த கேப்டன் போகப் போற கப்பல் ஆக்ஸிடென்ட் ஆகி அவன் உயிர் போகப் போகுது. அதைத் தடுக்கத் தான் இந்தத் தற்காலிக ஏற்பாடு. அவன் மரணத்தை தடுக்க நெனைச்சேன். அதுவும் வீணாப் போச்சு" தலையில் அடிக்காத குறையாகச் சொன்னார் இறைவன்.
"ஐயையோ இதெல்லாம் புரியாம ஏதேதோ பண்ணிட்டு காரியத்தை எல்லாம் கெடுத்துப்புட்டேனே? மனுஷன் மனுஷன்தான்...தெய்வம் தெய்வம் தான்" புலம்பினான் `ஒரு நாள் சாமி`
"இதோ பாரு! நான் பண்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் இருக்கும். நான் போடற திட்டம் எல்லாம் மனுஷங்க போடற கம்ப்யூட்டர் ப்ரோக்ராமைக் காட்டிலும் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அதெல்லாம் ஒனக்குப் புரியாதுப்பா! நடக்கறதெல்லாம் வெறும் நன்மைக்கே என்ற எனது கோட்பாட்டை நீ புரிந்து கொண்டு விட்டாயானால் அந்த நம்பிக்கை உனக்கு வந்து விட்டால் உனக்கு எந்தவிதக் கஷ்டமும் இல்லை.... புரிந்ததா?"
"அப்போ! அந்த மூணு பேருக்கும்" இழுத்தான் ஆசாமி.
"எல்லாத்துக்கும் ஒரு மாற்று ஏற்பாடு பண்ணி வெச்சிட்டுத் தான் ஒன்ன அனுப்பினேன். நீ இப்படி ஏதாவது சொதப்புவேன்னு எனக்குத் தெரியாதா என்ன?"
"அது என்ன?"
"அதெல்லாம் ஒனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்ல. அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டியதன் அவசியம் இப்பவாவது புரிஞ்சுதா?" சொல்லிவிட்டு ஆண்டவன் மறைந்து விட்டார்.
"இறைவன் வஞ்சிக்கிறான். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? அந்த ஆளப் பாரு" இப்படிப் பலவிதமான கூக்குரல்கள். ஆண்டவனைத் துhற்றிச் சொல்லும் வசை மழைகள்.
அவனது செயல்பாட்டைப் பற்றி அவனது துல்லியமான கணக்கு பற்றி அறிய முடியாத அற்ப ஜந்துக்கள் நாம்.
"நடப்பதெல்லாம் நாராயணன் செயல்" என்ற கோட்பாட்டுடன் நல்லதையே எண்ணி நல்லதையே செய்து நமது கடமையைப் பண்ணுவதையே ஆண்டவன் எதிர்பார்க்கிறான். நல்லதோ கெட்டதோ வந்ததை அப்படியே ஏற்று வாழ்வதையே அவன் விரும்புகிறான்.
கடந்த காலத்தை மாற்றுவது நம் கையில் இல்லை. இனி வரப்போகும் காலங்களில் நல்லதே செய்வது நம் கையில் தான் உள்ளது. அதற்குத் தான் சாட்சியாக நம் ஆத்மாவாக நம் ஒவ்வொருவரிடத்திலும் உறைந்து கொண்டிருக்கிறார். அந்த ஆத்மாவின் குரலைக் கேட்டு அதன்படி நடப்பதே நலம் பயக்கும்.



நன்றி - Educational Service

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Total Pageviewers (Last week)